திங்கள், 16 மார்ச், 2015

"பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில்"


1. மன்னன் அமர்ந்தானே மண்மீது கண்ணனே 
    என்னில் அமர்வாயோ ஏற்றிடு கோலத்தை 
    தன்னில் தனைக்காண தாகம் நிறைந்தது 
    தன்னை தளராது தாங்கு

2. உண்மை உறைந்திட ஊரும் மறந்திட 
    கண்ணில் தெரிவது கானல் நாட்டினில் 
    ஊழல் பெருச்சாளி ஊதும் சங்கினித் 
    தாழ்வ தரிதே சமர்செய்

3. ஆட்சி நடக்குதா ஆட்டம் நடக்குதா 
    காட்சி பிழையான கட்சி வளர்க்கவே 
    சாட்சி சடங்கென சட்டம் அமைக்கிறான் 
    மாட்சி மருந்தில்லா மாயம்

4. தெள்ளத் தெளிவாகத்  தேடல் அறிந்தேனே 
    மெள்ளத் தெளிவாகி மீண்டுள் அமர்ந்தேனே 
    தெள்ளு தமிழிசைத் தேனைக் கொணர்வேனே 
    அள்ளுங் களமாக்கி ஆள்

5. கந்தையில் தன்னிலை கண்டதும் கொண்டதை
    சந்தையில் தள்ளிட தன்னையே கண்டவன்
    சிந்தையில் தோன்றிய தென்றலே கல்லென
    வந்தானை சொல்லாள வையும்

6. நானற்ற தேசத்தில் ஞானத்தை தேடி 
    தானுற்ற பாசத்தில் சங்கீதம் பாடி 
    வானுற்ற மாயத்தை மௌனித்து நாடி 
    நானேற்ற வேடத்தில் நாணேற்ற சூடி (னேன்)

7. கட்டுக்குள் அடங்கிடான் காட்டுக்குள் தீயாய் 
    பிட்டுக்கு சுமந்தவன் பேரண்ட மாயன் 
    உட்கொண்ட நஞ்சுடன் ஒற்றாத மெய்யன் 
    விட்டேறி வறுமையின் வேடத்தே மொய்ப்பான்

8. கோலத்தை கொண்டவன் கொடுத்தான் கோணத்தை 
    ஞாலத்தில் வந்தவன் நிறைத்தான் ஞானத்தை 
    காலத்தில் கண்டவன் கௌரவம் கோர்த்தானே 
    பாலத்தை பண்டவன் பணிந்தான் பந்தினிலே

9. கல்லுண்ட கோலத்தில் கட்டுண்டேன் கோளத்தில் 
    வில்சென்ற கோணத்தில் வெட்டுண்ட கோரத்தில்
    சொல்வென்ற கோவத்தீ சூழ்ந்தாண்ட காலத்தில்
    செல்லென்றே சந்திக்கச் சேணத்தை சீர்செய்தேன்

10. பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில் 
    சிலகால நேரம் சிறகுற்று பறந்தேன் 
    விலையான தெங்கும் விடிலோடு தோன்ற 
    கலையான நாதன் கடந்தெங்கே செல்வான்

11. எங்கிருக்கான் அங்கிருக்கான் என்றே அலைபாயும் 
     கூட்டத்தில் அத்தனை உருவிலும் அவனுள்ளான் 
     என்பதை உணருங்கால் ஊழ்வினைகள் தீண்டா 
     பதார்த்தமாகி எதார்த்த மாயை நிரம்பும் 

3 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
வரிகள் ஒவ்வொன்றும் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்தையில் தோன்றிய தென்றலை ரசித்தேன்...

ஊமைக்கனவுகள். சொன்னது…

கட்டறுத்து மெய்ஞானம் காணத் துடிதுடித்து
தொட்டுயிர்க்கும் உங்கள் தனிப்பாடல் - மொட்டுயிர்த்துக்
கண்கொள் மலராகும் காண்போர் கருத்தாளும்
விண்கொள் வியப்பின் விளக்கு!

அருமை அய்யா!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி