திங்கள், 29 நவம்பர், 2010

"கொய்யப்பட்ட ரோசாவே"கருப்பாடு களமிறங்கி
களவாடி உறவாடிய
கரைச் சேரா கனவுகண்டு
கரைந்து வாழும் உள்ளமிங்கு

காதலைத்தான் கைக்கழுவ
காதல் செய்த குற்றமிங்கு
கிளிப்பேச்சு கேட்க வந்து
கிழிந்த காகிதம் ஆனேன்

கீழ்வானம் சாட்சி சொல்ல
கீரி ருசித்த பாம்பானேன்
குழந்தையான குணமொன்று
குழைந்து குரோதமானதே

கூவி கொக்கரித்தால்
கூடுமே கூட்டமிங்கு
கெத்தாக ஆண் நிற்க
கெட்டுப்போன பெண்ணாவேன்

கேளாத உலகமிது
கேட்போரும் இச்சையுடன்
கை பிடித்த அரளி விதை
கை கோர்க்கும் கனவுகள் மறைய

கொடும்பாவம் செய்த எம்மை
கொல்லாமல் விடமாட்டேன்
கொடுஞ்சினம் தான் கொக்கறிக்க
கொய்யப்பட்ட ரோசாமலர் - பேச

கோழைத்தனம் வேண்டாமடி
கோபம் கொள்ளக் கூடாதடி
கோகுலத்தின் ராதைக் கூட சீதைதானடி
கோரைப் புல்லாய் நிமிர்

கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...............

டிஸ்கி : பாதிக்கப்பட்ட ஒரு மங்கையின் நிலையிலிருந்து நான் எழுதிய வரிகள் தவறிருந்தால் இம் மா பாவியை மன்னித்தருள வேண்டும் தாய்குலமே

கூத்தாடும் தெருக்கூத்து

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....
சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......
ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......
சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........
பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்
நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்...........
டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தந்தை மனம்..........பொன் நகைத்தது
பெண் நகைத்ததால் - இரவு
விண் வியக்கும் வீதியுலா
விடியற்பொழுதோ நின்
மணவிழா......

கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......

கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்

வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....

பாதையை சீர்ப்படுத்தி - நின்
துணையின் கரம்பிடித்து
தொலை தூரம் பயணிக்க
என் அன்பு மகளே.........

டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே

டிஸ்கி 2 : ஒரு தந்தையின் ஏக்கங்களை சந்தித்தேன் அவர் மனநிலையில் இருந்து நான் எழுதிய வரிகள் இவை.......

சனி, 27 நவம்பர், 2010

எறும்புகளாய் நாம் இன்று ..........அதிகாலை இருளினிலே
விடியலை வரவேற்க்க
பசுவின் சானத்தெளிப்புடன்
வாசல் மொழுகி
நெடுங்கோடு வலைப்பின்ன
கரங்கோர்க்கும் மாக்கோல
அன்னதானம் மங்கையரின்
கைவண்ணத்திலே


இருள் விதைத்த
விடியல் விழிக்க
நெடுநீள வரிசையிலே
மாக்கோல துகள்
சுமந்து மழைக்கால
உணவாக சேமிக்க
துவங்கும் எறும்பு

உதிரும் உணவுகளும்
சேமிப்பில் அடங்கும்
மாக்கோலம் தேடி
தொடுவானம் கூடே
நெடுந்தூரப் பயணம்
சீரான நேர்வழியில்
தொடர்கின்ற பயணம்
செயற்கையான
மாக்கோலம்..........

ஐந்தாண்டு ஆட்டத்திலே
அவ்வளவும் சுரண்டியாச்சு
இனி சுரண்டுவதற்கு
ஏதுமில்லை மக்கள்
உயிர் மட்டும்தான்
பாக்கி இங்கு
அடுத்தவன் தான்
சுரண்டட்டுமே
விட்டுகொடுக்க
மனமில்லையே
மறுமுறை
வாக்களிக்கும்
கரங்களிலே
சலவை நோட்டு
மட்டும் பேசும்
கால்பங்கும்
குறையாது
சுரண்டிசேர்த்த
சொத்தினிலே
பல தலைமுறை
தாங்கும் வம்சத்தையே..........

பறிகொடுத்த சேமிப்பும்
சவமான சொந்தங்களும்
கிடைக்காமல்
தினம் தேடும்
எறும்புகளாய் நாம்
இன்று ..........

டிஸ்கி : நம்மகிட்ட சலவை நோட்டெல்லாம் கிடையாது விருப்பம் உள்ளோர் வாக்களிக்கலாம்,

டிஸ்கி 1 : யார் மனசையும் புன்படுத்தனும்னு இந்த பதிவை எழுதவில்லை மனசுல பட்டுச்சு படார்னு எழுதிட்டேன் அப்படி புண்பட்டால் நான் போருப்பில்லைங்கோ நீங்களே பொறுப்பு

டிஸ்கி 2 : எறும்பை துருப்பாக உபயோகித்ததற்க்கு எறும்பிடம் மன்னிப்பு கேட்கிறேன் தருவாயா, படங்கள் கூகிள்ல சுட்டது படமும் கதைச்சொல்லும்

வெள்ளி, 26 நவம்பர், 2010

துணிவோமா இனியேனும்...........


சலனமில்லா மனது
சாக்கடையில் விழும்
சாதிக்க நினைத்து
துணிந்து தூர்வார பழகு

சிந்திக்க நினைக்காது
சீர்கெட்டு அலைகிறாயே
சிரிக்க மறந்த உலகை
சீர் திருத்த பழகு

சுயம் உன்னில்
சூட்ச்சிகள் செய்வதால்
சுட்டெரித்து
சூட்ச்சிகள் வெல்ல பழகு

செருப்பாக மாறினாயோ
சேற்றில் கால் பதித்து
தொண்டன் எனும் பெயரில்
சாக்கடையில் கொடிபிடிக்க

மக்களுக்கு தொண்டு செய்ய
சாக்கடைகளை சாலவம்
அமைத்து கழிவை
வெளியேற்ற உறுதியளி

உனக்கும் தொண்டனாவான்
ஒருவன் அவனையும்
வழிநடத்து அரசியல்
சாக்கடையை தூர்வார

புதிய தொண்டனாக
தோள்கொடுப்போம்
சீருடை காவலரும்
தோள்கோர்ப்பர் துணிவோமா
இனியாவது .........

வியாழன், 25 நவம்பர், 2010

மலர் மாலை எதற்கு


மணமாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்

அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது

அழைக்க துடிக்கும்
கண்கள்............

அணைக்க துடிக்கும்
இளமை............

அதனை ஏற்க்க
மறுத்த மனது.........

மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க

மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க

இந்த மங்கையின்
சடலத்தில்............

மலர்மாலை எதற்கு........

டிஸ்கி : இக்கவி ஒரு மீள்பதிவு தான் சிலர் பார்த்த கவிதனை பலர் பார்க்க என்னி மீண்டும் பதிவிடுகிறேன்

புதன், 24 நவம்பர், 2010

துனிந்து வா...........


நன்னீரில் நனைத்து
துவைக்க மனதை
சகதிகள் களைந்து
சிகப்பு சாயம் வெளுக்க
பட்டாடைப் போல
பளபளக்கும் உள்ளம்

மறந்து துறந்துவிடு
குருதி குடிக்கும்
சாதியை மனதார
மனிதனாவோம்
கல்வி கற்போரும்
கற்பிப்போரும்
கருத்தில் கொள்ள
சான்றிதழில் சாதியை
தூக்கியெறி துணிந்து
புறக்கணிப்போம்
கரம் கோர்த்து


சாதிகளட்ற தனி உலகு
படைப்போம் துறந்து வா
துனிவோடு .....................

செவ்வாய், 23 நவம்பர், 2010

தொடர்பதிவின் தொடர்ச்சி பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.


தொடர் பதிவின் தொடர்ச்சி.........

முந்தைய பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

6, படம் : சிந்து பைரவி

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

தவறை தட்டிகேட்பாங்க பாருங்க

"பழகின பாஷையில படிப்பது பாவமில்ல"
"சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப்படி"

5, படம் வாத்தியார் வீட்டு பிள்ளை
படத்துல நம்ம தலைவர் சத்தியராஜ் பாடுவாருங்கோ

அண்ணன விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்கள கட்டி ஒரு ஊர்கோலமா
சிந்தையில் வைத்த அண்ணனும் தான்
பந்தலில் நிற்க்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா

சத்தியராஜ் படத்துல தங்கை பாசத்தில் கண் கலங்கி பாடுவார்
பார்க்கும்போது நம்ம கண்ணும் கலங்கிரும். இதுக்கு மேல முடியல சகோ கொஞ்சம் கண்ணு கலங்குது எனக்கு

4, படம் : திருவிளையாடல்

"பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்"

தென்றலை வர்ணித்து பாடியிருப்பார் தென்றலோடு பயனிக்கற மாதிரி ஒரு அனுபவம் உண்டாகும் கேட்டுப்பாருங்க

3, படம் : கற்பகம்

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா

என்ன அருமையான தாலாட்டு தூங்காம கேளுங்க அவ்வளவு அருமையா இனிக்கும்

2, படம் : மரகதம்
பாடியவர் : சந்திரபாபு , ஜமுனா ராணி

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே..........

என்னை நடனமாட களமிறக்கிய சந்திரபாபு பாடல்கள் என்னை இன்னும் சில பழமைவாதிகள் சந்திரபாபு என்றே அழைப்பர்

1,படம் : பாக்கியலட்சுமி

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார்
தோழி (மாலை)

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் எதிர் காலம் (மாலை)

மறக்க முடியாத பாடல் என்ன இன்னும் மயக்கம் தெளியவில்லையா சரி அடுத்து யார் யாரெல்லாம் சிக்கராங்கன்னு பார்ப்போம வாங்க வினோ , தமிழ்காதலன் அடுத்ததா பன்னிகுட்டி ராமசாமி (அதாங்க நம்ம கவுண்டரு) சி.பி.செந்தில்குமார் சாருக்கு படம் பார்த்து விமர்சனம் செய்ய நேரம் இல்லாத காரணத்தால் அவரும் தொடரவேண்டும் என்ற என் ஆழ்ந்த கருத்தினை உங்கள் முன் வைக்கிறேன் ஹலோ எங்க போறீங்க இன்னும் முடியல அடுத்ததா களம் இறங்குபவர்கள் நம்ம நாகராஜசோழன் MA (அதாங்க கோல்ட் பிரேம்) அடுத்து கருத்து கந்த சாமி நம்ம பிலாசபி பிரபாகரன் என்ன மக்கா சந்தோஷம் தானே

பி.கு. யாரவது தப்பிக்கனும்னு நினைக்க கூடாது இது அன்பு கட்டளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கவிதை மூலம் வதம் செய்ய படுவர்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.

வணக்கம் பெண் மனசை வெளிபடுத்தும் அல்லது பெண் குரலில் பாடிய வரிகளை தொடர்பதிவாக இட அழைப்பு விடுத்திருந்தார்கள் ரோசா பூந்தோட்ட சகோக்கள்
நான் ரசித்த பாடல் வரிகளை தொடுத்துள்ளேன்

சுவாசிக்கும் காற்றோடு
கலந்த தேன்சுவை
கீதங்கள் என் தமிழ்
கவிஞர்கள் தொடுத்த
வரிகள் உறவுகள்
சேர உணர்வுகள்
ஏங்கும்
நஞ்சுன்னும்
போதும் அமுதாக
இனிக்கும் வரிகள்
அலைபோல அழைத்திடும்
ஆனந்தம் இதுவென
விமர்சனம் இல்லாமல்
கொடுத்துள்ளேன்
விமர்சிக்க முடியாத
வரிகளை
நம்ம பாட்டி
கடை இட்லிபோல
என்ன பாக்கறீங்க
சுவைத்து பாருங்கள்
சுடாமல் சுடும்
பசிக்கு ரசிக்க
ருசி பறந்து போகும்
சுவையான வரிகள்


10,மாலையிட்டமங்கை'
T.R.மகாலிங்கம்பாடியது

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே

நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே....ஆ...ஆ..ஆ..ஆ..ஆ .. "

செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்'

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ' அவள்

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
இன்றும் நான் எங்கு சென்றாலும் எனக்கே அறியாமல் நான் முன்னுக்கும் பாடல் இது என்னோட மனசக்கு ஒரு ஊட்டச்சத்து மாதிரின்னு வச்சுக்கலாம் அம்மா இன்றும் சொல்லுவாங்க இந்த பாட்ட எங்காவது கேட்ட என் சின்ன பிள்ளை பாட்டுன்னு

9,படம்: சேரன் பாண்டியன்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி


குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

அண்ணன் தங்கச்சி மேல வச்சிருக்கற பாசம் அண்ணனா இன்னைக்கும் தங்கச்சி எல்லாருக்கும்

8,படம்:இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

"காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"
உண்டாகனும்..........


7,படம்: மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
தன்னம்பிக்கை வரிகள்
இது தொடரும் நாளைய பதிவில்..................

சனி, 20 நவம்பர், 2010

தரண் வெல்ல..................


கருவேலம் முற்களில்
கால் பதிந்த கோலம்
சலனப்படும் சருகுகள்
சாடை சொல்லி கேளேன்

பசியோடு பயனிக்க
மரவள்ளி பசி தீர்க்க
துணைக்கொண்டு
தான் நடக்க

மறைகின்ற கதிரவனும்
மாலை பொழுதென்ருரைக்க
இமை கூடே அழைக்க
இளைப்பாற இடம்தேடி
சூழ்ந்ததங்கு இருளும்

நிலவொளியும் காணோம்
நீண்டதொரு நொடி பொழுது
விடிகையிலே கண்விழிக்க
தலைவிருட்சம் ஆலமர
மடியில் தான் கிடக்க

ஆயிரம் கதை சொல்லி
தலை இருக்க ஆடாதே
தரண் வெல்லதானிருக்கு
தான் வெல்ல திணிக்காதே
குரல் உயர கேட்டிற்று
இமை விழிக்கையிலே.............

கார்த்திகை அகல் விளக்கு

தெருவிளக்கும் கண்சிமிட்ட
வாசல் தோறும்
சுடர் வீசும் அகல்விளக்கே
அலங்கரிப்பாய் இல்லத்தை
இடர் நீங்கும் ஒளிதருவாய்
இருள் சூழ்ந்த உள்ளத்தே

தனிச் சுடராய் ஆகாதோ
பெரும் சுடராய் மாறி வா
சுயம் வெல்லும் உள்ளத்தே
சூட்சமங்கள் எரித்திட்டு
சுற்றிவரும் சுற்றார்
உள்ளத்தை
சுமக்கின்ற சுகமாக்கு

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 3


ஒத்தையடி பாதை
சத்தம் சருகுகள்தான்
சுத்தம் செய்தாலும்
நித்தம் உதிரும்
சருகுகள் மண்ணிற்கு
எருவாகும்

சத்தம் போடாமல்
நித்தம் எழும் எண்ணம்
சுயநலம் காக்க
சூறையாடும் நம்மை
நித்தம் ஒரு பாதையிலே
எத்தனிக்கும் இன்றும்

நாளை ஒருநாள்
நம்மில் இல்லையெனில்
என் செய்வாயோ
மானிடா............................

புதன், 17 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 2 முத்தம் தீட்டிய திட்டம்


முத்தமொன்று கொடடா
செல்லம் உனக்கு
மிட்டாய் வாங்கிதாறேன்
இன்னுமொன்று கொடடா
உன் விருப்பம் வாங்கிதாறேன்

எதிர்பார்ப்புகள் இல்லா
மனது எதிர்ப்பார்க்க
தூண்டியதோ உனை
முத்ததிற்க்கு கிட்டிய
மிட்டாய் சத்தமில்லாமல்
சங்கதி சொல்லியதோ
உன்னிடம்

கடைத்தெரு போகவும்
காய்கறிகள் வாங்கவும்
தன்கடமையை செய்யவும்
படித்து பட்டம் பெறவும்
கையூட்டு பெற்றவரிடமே
முத்தத்திற்க்கு கிடைத்த
மிட்டாய் உன்னை
இன்னும் எத்தனை
திட்டங்கள்
தீட்ட வைத்தனவோ

இதுவரை பிரதிபலன்
எதிர்பாராமலிருந்த
சில பிஞ்சு மனதின்
எண்ணங்களை
புரட்டிபோடுகிறது
முத்தத்திற்கு கிடைத்த
மிட்டாய்...................

டிஸ்கி: முதலில் என்னை மன்னிக்கவும் சகோதர சகோதரிகளே பாசத்தில் இருந்துதான் உருவெடுக்கிறது கையூட்டும் ஊழலும் என்று வரிகளை கோர்த்துள்ளேன் தவறுதான் என்னை மன்னிக்கவும் எனினும் சிறு உண்மை சிறு நெஞ்சின் எதிர்பார்ப்பு என்பது கையூட்டாக மாறுவதாக என் உள்ளம் கூறியதால்
தங்கள் பார்வைக்கு

டிஸ்கி 1: தவறிருந்தால் தயங்காமல் தண்டிக்கலாம் தங்களை வணங்கி சிரம் தாழ்கிறேன்

செவ்வாய், 16 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 1


தலைசாயும் நெற்கதிரை
நெடுந்தூரம் தேடியலைய
புல்தரையும் பளிங்காக
வீழ்ந்ததொரு மழைத்துளி
தலைசிதறி தவறியல்ல

வாய்க்காலும் குளக்கரையும்
புற்புதறாய் மாறிநிற்க்க
தற்செயலாய் முளைத்ததொரு
ஊழல் பயிரால்
உருக்குலைந்து உருமாறி
உசர்ந்த கட்டிடமாய்
காட்சிதர மழைதுளியும்
யோசிக்க நாம்
விளைவித்த பயிரல்லவே


கடல்கலக்கும்
ஆற்று நீரும்
இடையிடையே
தேங்கி நிற்க்க
கடல் சேர வழியுமில்லா
அணைதடுப்பு மாறியிங்கு
மணல் கொல்லைப்போன
குழிகளிலே கண்ணீர்விட
குட்டையாக தேங்கி நின்று
உப்புநீராய் மாறியதுவே

அறுவடை செய்யா
ஊழல் பயிர் பறிக்கும்
உயிர்கள் இங்கு ஏராளம்
அறுவடைக்காலமோ
கானல்நீராய்
உரம்போட்டு வளர்ப்போரோ
பணம் தின்னும் பிணமாக
பிணம் தின்னி
பறவைகளும்
பணம் தின்வதில்லை
பணம் தின்னாலும்
உயிர் பிழைக்குமா
இவர்கள் பிணம்.............

அறுவடை செய்யா
ஊழல் பயிரோன்ரை
அறுவடை செய்யவாரீரா??

டிஸ்கி: அறுவடைக்கு வருவோர் வாக்களிக்கவும்ஞாயிறு, 14 நவம்பர், 2010

"வருவாயோ என்னவளே"


காகித வரியாக நான்
ஒரு நாள்
நீ வாசிப்பாய் என்று

தென்றலோடு
என் சுவாசம் வீச
என்றாவது
நீ சுவாசிப்பாய் என்று

கற்பனையில் கரைகின்ற
நொடிபொழுதும்
முகம்தெரியா
உனை ஏக்கங்களால்
தாக்கி வர்ணிக்கிறது

சத்திரத்தில்
உறங்கையிலும்
நித்திரையும் தோற்கிறது
உனை கண்டிராத
காதல் அலையில்

சித்திரமும்
சிரிக்கிறது
உறங்கா விழிகளும்
சொப்பனத்தில்
உனை தேடும்போது

எத்திக்கும் காணவில்லை
உன் கால்தடங்கள்
என் பாதையிலே
இனியேனும்
தடம் பதிக்க
என் இனியவளே

உணர்வாய் உருகுகிறேன்
உருபெற்று உயிர்பெற்று
வருவாயோ
என்னவளே
வெகுவிரைவில்
என் கண்ணெதிரே.....

சம்மதமில்லா
நிம்மதி வெல்லும்
இனிமையுடன்
தினம் தினம்
உனைத்தேடி
ஒரு பயணம்
வருவாயோ என்னவளே......
குழந்தையாய் நீ சிரிக்க


குழந்தையாய் நீ சிரிக்க
குடிகொள்ளும் மனம்
எல்லாம்
தினம் வெல்வாய்
புவிதனிலே புதுயுகம்
படைக்க வாழ்த்துக்கள்

மழையில் நனையாத
மலரொன்று
நலம் விசாரிக்கும்
நேரம்
புரியாத புதிராய்
புலன் விசாரி
புவி ஆல்வாய்
இங்கு..........

பச்சிளம் குழந்தை
உனை 18 ஆளும் வரை
பெற்றோர்
கைவண்ணம்
பேராசியர்
சொல் வண்ணம்
புரிந்து
நடந்துக்கொள்
பாதகனும்
நம் எல்லை.............


தில்லொன்று கொள்
மனதில்
தினம் விடிவிக்கும்
கதிரவனும்
கண்வியக்க
மண் சிறக்க
பாதை வகுக்க.........

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

டிஸ்கி : குழந்தைகள் தின விழாவிற்க்கு கவி தொடுக்க அழைப்பு விடுத்த "ரோஜாப்பூந்தோட்டம்" பதிவர்களுக்கு அன்பு வணக்கம்... இது என் 75 வது பதிவு

வெள்ளி, 12 நவம்பர், 2010

நீராட்டும் காட்டருவி
ஒய்யாரமாய் பாடிவரும்
காட்டருவி கண்சிவக்க

கரைகின்ற கார்மேகக்
காதலுனைத் தாக்க

தடைபடும் தடுப்புகளை
தகர்த்திடுமுன் கோபம்

மறவாதே மழைத்துளியே
நீ மாற்றிவரும் இயற்கையை

நீராட்டி வரம்தருவாய்
காட்டருவி நீயே

விளை பயிர்
வீழ்வில்லாமால்
விளைந்து செழிக்க
கரம் தொழுவோம்
உனை கருத்தில்கொள்
தாய் மண்ணை.......


புதன், 10 நவம்பர், 2010

வதம்


அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூளுரைத்து கொட்டமடக்கி
அடிபணியானின்????
வாளுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்

திங்கள், 8 நவம்பர், 2010

தவம்


கானகம் காணா
கடுந்தவம்

காலையும் மாலையும்
காட்சி பிழம்பாய்

வீழ்ச்சிகள் எல்லாம்
விடை பெறத்தான்

சூழ்நிலை வித்திட்ட
விதியல்ல

தென்றல் வீசமறந்த
கீற்று குடிசையிலே

தள்ளாடும் வயதினிலும்
தனித்துழைக்கும்
இரு மனம்

காத்திருக்கும்
கண்மணிக்கு
சோறுபடைக்க
கடுந்தவம்
கண்டேன் அவர்
கண்களில்............

மாதங்களில் காதலிஏட்டில் ஏறிய
என் முதற்கனவு
காட்டருவி
நனைந்திருந்த
மழைதருணமாய்
மாதங்களில் காதலி
மனமெல்லாம்
சிறகுகள் படபடக்க
தீரா மகிழ்வில்
சமர்பிக்கும் என்
என் பணிவான
வணக்கங்கள்..................

மகளிர் சிறப்பு (லேடீஸ் ஸ்பெஷல்) தீபாவளி மலரில்
மாதங்களில் காதலி என்ற தலைப்பில் ஏட்டில் அரங்கேறிய என் கவிதை
சித்திரை நிலவாக
நின் முகம் காண?

வைகாசி திங்களில்
உதித்தவளோ நீ

ஆனி அடிதார்ப் போல்
நெஞ்சில் பதிந்தாய்

ஆடி யின் பிம்பமாக
நள்ளிரவில் நீ

ஆவணி யில் வீசிய
நின் தாவணிக் காற்று

புரட்டாசி திங்களில்
உதித்த நிலவு

ஐப்பசி தீபவொளியில்
புன்னகை பூத்தது

கார்த்திகை அகலொளியில்
தேவதையாய் நீ

மார்கழி பூக்கள்
மலர வெட்கப்பட்டன

தை பிறந்தும் நின்
விழி வழி மறிக்க

மாசி மகமாக
மனமெல்லாம் கடலலைகள்

பங்குனி உத்திரத்தன்று
நித்திரையில் கண்ட கனவானேன்


என்னை ஊக்குவித்த இயற்கைக்கு முதல் வணக்கம்
அன்பு அக்கா தேனம்மை லட்சுமணன் அவர்கட்க்கும்
அன்பு அக்கா சித்ரா சாலமன் அவர்கட்க்கும்
பதிவிட்ட மகளிர் சிறப்பு (லேடீஸ் ஸ்பெஷல்) தீபாவளி மலர் ஆசிரியர் அவர்கட்க்கும் பணிவான என் வணக்கங்கள்


தாய் தந்தையை வணங்கி ஆசிபெற்று
தங்களின் ஆசி பெற காத்துநிற்கும்

தம்பி
தினேஷ் குமார்

சனி, 6 நவம்பர், 2010

உயிர் மட்டும் பேசுதடி...............

கடுகும் கனக்குதடி-நின்
கார விழி பார்வையிலே

கரும்பும் கசக்குதடி-நின்னை
காணாத நாழிகையில்

குரும்மிளகு இனிக்குதடி-நின்
மீளாப் புன்னகையில்

குயில் கூவ மறந்ததடி-வின்
வியக்க குரல் கேட்க்க

வலியும் சுகம் சுமக்குதடி-நீ
வரும் கடைகால நினைவினிலே

உடல் கிழிந்த கோலமடி-என்
உயிர் மட்டும் பேசுதடி

எமன் அழைக்கும் நேரமடி-நீ
எங்கிருக்காய் என்னவளே

சதி செய்த சாதிவெறி-என்
உடல் ருசித்து பசிதீர்த்ததடி

எவன் படைத்த சாதியடி-தினம்
குருதி சுவைக்க போகுதடி

மதிவெல்லும் உலகமடி-இனி
மாறவேண்டும் சாதிவெறி

களங்கமில்லா காதலடி-என்
உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி..........................................................................

வெள்ளி, 5 நவம்பர், 2010

உமையவளின் குரல் இங்கேகோவில் திருட்டு - கேள்வியின் நாயகன்

உலகைக்காக்கும்
உமையவளே
உன்னால்
உன் நகையை
காத்துக்கொள்ள
முடியவில்லையே !!
-சாய்-
http://tamizhkirukkan.blogspot.com/2010/10/blog-post_31.html
நண்பர் சாய் அவர்களின் கேள்வி உலகாளும் உமையவளிடம்
dineshkumar said...நண்பரே உமையவளின் குரல் இங்கே

உனைக் காக்க
உலகை
சுழட்டுகிறேன்
பம்பரத்தின்
சாட்டையாய்
என் சிலை
அணியும்
நகை காக்க
மாட்டாயோ
மானிடா
நான் என்
சிலையனியும்
நகை காப்பதா
என்னை
கரம் தொழும்
நின் உலகை
காப்பதா
நீயே
பதில் சொல்???????........

வியாழன், 4 நவம்பர், 2010

ஏக்கங்களின் தீபவொளி ஏத்துவோம்

ஏழ்மையறியா
சிறுவயதில்
ஏக்கங்கள்
நிறைந்த
தீபாவளி....

திருநாள் கான
வெகுநாள்
ஏக்கம்.......

பணம்படைத்தும்
மனம் வெல்லா
பறவைகள் பல
இணைந்து
கொண்டாடுவோம்
இவர்களுடன்
இன்றைய தீபாவளி.......

மனம் வெல்லும்
மாயைகளற்ற
உலகை........

அனைவருக்கும் இனிய தீபவொளி திருநாள் வணக்கங்கள்...........

புதன், 3 நவம்பர், 2010

மனதின் வயதில்

ஏன்தான் துடிக்குது
மனது
எதிலோ இனிக்குது
வயது
பழசா போனதே
மனது
புதுசா நினைக்குது
வயது
மாறாத நிலைபெற்ற
மனது
மாற்றங்கள் காணுதே
வயது
முடிவில்லா நினைக்கும் 
மனது
முடிவுற்ற நிலையில்
வயது............. 

செவ்வாய், 2 நவம்பர், 2010

யுகம் மாறவேண்டும்

றிந்தும் தெரிந்தும்
றாத வடு மாறாத நிலை

றைவன் இனியாவது இயற்றட்டும்
ழம் வெல்லும் உலகை

யிர் பெற்ற உவமைகளாக
ர் தேடியலையும் பறவைகள்

ழுதப்படாத கதைகள்
ட்டில் இனியாவது ஏறட்டும்

யமிலா வாழ்வு என்றிவர்க்கு

டுக்கபடுகிறார்களே தமிழ்நாட்டிலும்
யாத குரலாய் குழந்தையின் பசி..........

திங்கள், 1 நவம்பர், 2010

எங்கவீட்டு தீபவொளி வாங்க கொண்டாடலாம்.....


அம்மையின் கரங்களில் 
அறுசுவை அதிரசம் 
சுவைக்க......
  
அதிகாலையில் 
நல்லெண்ணெய் 
குளியளிட்டு 
நோம்பெடுக்கும் 
பாத்திரத்தில் பலகாரம்
பல வைத்து கூடே
வாழை பன்னிரெண்டும் 
பூஜை சாமான்களுடன்
நோம்பு கலசம் இருக்கும் 
கோவில்தனில் குடும்பத்துடன்
சென்று பூஜையிட்டு.....

நடுவீட்டில் தலைவாழை 
இலை விரித்து 
பச்சை பலகாரம் 
அடுக்கி வைத்து 
புதுதுணிகள் கூடே 
மற்றொரு படையலும்
போட்டு தந்தை 
நோம்பு கயிறுதனை
எங்கள் கரம்தனில் அணிய
தொடங்கும் தீபவொளி

சரவெடி சகிதமாய்
முதல் வெடி 
என்னில் மூத்தவர் 
வைக்க தொடர் 
நாட்டு வெடி
நான் வைக்க அதிரும்
சாலைகளில் 
புகை மூட்டம் கூட

அம்மாவின் குரல்கேட்டு 
உள்ளே செல்ல இருவரும்
சகோதரி வீட்டுக்கு
பலகாரம் கொண்டு 
சென்று சகோதரியின் 
பிள்ளைகளை இங்கே 
அழைத்து வந்து 

ஆசையாய் அம்மா 
அரவணைக்க பொடிசுகளை
சற்று பொறாமைதான்
அம்மா பாசத்திற்கு 
பாசவலையில் பகிர்ந்து 
உண்ணுவோம் பலவீட்டு 
பலகாரங்களை.........

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 
என் இனிய தீபவொளி நல்வாழ்த்துக்கள்..............

அன்புடன்

தம்பி தினேஷ்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி