சனி, 26 பிப்ரவரி, 2011

வர(த)ம் வேண்டி .....


காட்டுத்துறவி வேட்டைக்கு வாராய்
சங்கிலிக் கருப்பா சாட்டையை எடு
சொன்னது துடுக்கா காட்டினின் - மறை
மிடுக்கா துக்கத்தைத் துற

அஞ்சி நடுங்க ஆதிக்கம் நடக்கு
ஆளரவமில்லா சரீரம் மிதக்கு
சங்கதி யறியா சாட்சிகள் - சாக்கடை
திறந்த வாயிலில் நிற்கு

மக்கள் சிறக்க ஏற்றிய சுடர்மணி
மண் சிவக்க கடுந்தவம் களைந்து
ஏற்றுடல் ஏறி மாட்றுயிர் பேணி
காற்றுடல் ஏந்தி வா...

காலன் விளக்கிடும் மாளில்லா சூரனே
கட்றதிர் காண்டீவ மிசைக்க சுற்றதிரும்
பரிமீதல்லாப் பயணம் கண்டவர் காணா
விண்ணதிர் பிரம்மச் சுழல்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தலைப்பே யானின்று


கோடிகளில் விருப்பமில்லாதவன்
சனக் கோடியில் ஒருத்தனம்மா
எந்தன் உயிர்ப்பு நீ என்றே
உள்ளவன் வாசிக்கிறான்

தடைகற்கள் பலவென்றறிந்தும்
தடை மீறி நினையே யாசிக்கிறான்
சுவாசிக்கிறான் எனது சுவாசமே
நீ தான் என...

இதுவரைக் கண்டதில்லை உனையான்
காணா துடிக்குதம்மா என்னுயிர் - காலன்
அழைப்பினும் உனைக் காணாது எனை
ஆட்கொள்ள அதிகாரமற்றவனவன்


வியாழன், 24 பிப்ரவரி, 2011

எனதுறக்கமே....!


துரித காலமாய்
என்னை விரட்டுகிறாய்
இமைகளின் தகிப்பு
சிவந்த விழிகளில்
மிரட்டுகிறாய்
மீண்டு துரத்துகிறேன்
எனதுறக்கமே எங்கே நீ.....

தவிக்க விட்டு
தடம்புரள தாங்கிய பிடியில்
உருகும் மெழுகின்
தீண்டா சுடர் விட
தூண்டும் திரியின் தகிப்பில்
என்னை உணர்கிறேன்
நினைவில் உறைகிறேன்.......


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

மலர் தேடும் நார் ...!


எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்

நிந்தன் நிழல் தொட மலரும்
நினைக்கையிலே படரும் கோலக்
கொடிமுல்லையே பிரியா பிறவிதனில்
மறைவிதித்த புதுப்பிறவியாய்

துறவு பூண்ட துணிவு என்னில்
நிதம் கலக்குதடி உணர்வின் உறவாய்
நீந்துகிறேன் தழலாய் தூண்டுகிறேன்
மாண்டுயிர்த்த மலர்ச் சரமாய்......

திங்கள், 21 பிப்ரவரி, 2011

நினைவு


கண்ணோடு இமையாக
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............

கலியுகம் : சமயம் இல்லாததால் நண்பர்களுக்காக ஒரு மீள்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

புதையாளும் சரீரமே


மண்மேடு எங்கும் கலவரம் தாங்கும்
மாறும் நிலை ஏனோ ? காருண்யம்
போற்றும் மானிடா,- குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?

மன்னவனாளும் குற்றம் எதுவோ..?
மக்களைத் தாக்கும் குண்டுகள் ஏனோ?
உயரே பறக்க சிறகுகள் உண்டோ..?!
சாதிய வெறியனே...

மனிதம் மனிதம் நிமித்தம் மரணம்
புகழ்க் கொண்டுக் கூடி நிற்பர்
மாளும் உடலில் பங்கெடுப்பாரோ
புதையாளும் சரீரமே.?

கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் ..............................

திங்கள், 14 பிப்ரவரி, 2011

"பிறவித் தேடல்"



காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?

இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.

சனி, 12 பிப்ரவரி, 2011

எந்தன் துணையவளே...!


கன்னி மயிலே...! கொஞ்சும் கிளியே...!
கோவைப்பழமாய் என்னை கொத்திச் செல்லடி
கானக் குயிலே காணா மறையேன்
சோளக்கதிராய் என்னை கொரித்துச் செல்லடி

பருவச் சிலையே...! பூங்கா வனமே...!
மல்லிச்சரம் யான் சூடிக் கொள்ளடி
பாசமழையே பச்சைக் குழந்தாய்
தாவிக்கொள்ளடி தாயாய் அணைப்பேன்

சிட்டுக்குருவி மென் இசையருவி
திணையருப்பாய் எந்தன் இதயத்திலே
தினம் இசைப்பேன் இன்பஇயல் தொடுப்பேன்
இனியவளே...! எந்தன் துணையவளே...!

மலர் பறித்தேன் அள்ளி சரம்தொடுத்தேன்
உந்தன் கரம் பிடிக்க மாயமென்ன
கண்ணில் மறைவதென்ன மாயையன்றோ
மனதின் தேடலன்றோ ...............

கலியுகம் : இருமனம் இணையும் மறுகணம் மறையும் மீளில்லா வாழ்வுதனில் மீட்டெடுக்கும் நினைவு மட்டும் வழிநடத்தும் வருடங்கள் கரையும் வாழ்நாள் முடிவினில் நினைவலை ஓட்டும் படச்சுருள் இனியேனும் நிகழாகட்டும் ............

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சுத்தச் சுடரே....


சத்திரத்து அமர்ந்த சித்திரமோ சித்திரையில்
வெற்றி டத்து நகைத்த மச்சினமோ
பற்றவை மிளிரும் சுத்தச் சுடரே
அற்றவை துறந்த மனமே

இழைதளிர் கூடில்லா இமைநீர் சாடும்
சொப்பன சுவர்க்கம் யுனைச் சமர்த்தும்
நரைதறிக்கும் நகநரகண்கள் விளைந்தகரும்
வளமின்றி வரமருகும்

கொடியுடை மல்லி நடையிடை சூடா
நறுமணம் மாளும் மரமெறிக் கல்
மடிவீழ்க் கனி அள்ளிக்கொடுத்தான்
கிள்ளியடுக்க மாறுமது

கலியுகம் : ஆசைகள் துறந்த மனமதின் பிரகாசம் வின்மீனுக்கீடாகும். மனம் பயணிக்கும் வழியோடையில் அகற்றப்பட வேண்டிய சில தடைகற்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ருத்ரம் ...


நித்திரை பூவிழி சித்திரம் தேடுது
மரக்கிளை வாழி கான மயக்கத்திலே
நிந்தனைத் தூண்டும் சந்தன சுகந்தம்
ருத்ரனவர் காணும் மயிலே

பருவத் தடையா பார்வைப் பிழையா
பாவையின் வழிதனிலே பார்வையிழந்தான்
தன்னிலை மறந்தோன் தாரண மந்திரம்
தாங்கும் எந்திர மாவதே

உருகும் மெழுகின் திரியாய் எரியும்
சுடரில் படரும் காரிருள் போர்தனைத்
தூண்ட வென்றதிருவரில் யவரறிவர்
வேண்டுவோர் தானமிங்கு

கற்றோன் மறைவான் சூழலின் கனலில்
சுற்றம் மறந்தோர் காணுயிர் மாளும்
நீண்ட வனத்தினுள் நிலமத்தில் நீரின்றி
தவிப் படங்கும் தாகம்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

"அபலை 'அந்தம்'..."


மா ரணம் ஆரா தூர்வனம்
பருவ மழையும் அறியா பிழையா
ஆனந்த ஈர்ப்பில் மறவா நனைந்து
பிறவா பிறப்பு பிரிதோர் உயிரில்

பெற்ற பிள்ளை நாடுமது தென்றல்
ஆளுமை அடங்கும் குளிரில் தகிக்க
ஏட்டில டங்கா ஓவியம் எழுதா
இலக்கண மடங்கும் காவியம்

பட்டி அடைத்தான் புழுதியி லமர்ந்து
பூர்வ துணையாம் புகலும் இடமது
புண்ணியம் கிட்டா நிலையும்
ஏற்க மறுக்கும் நோன்பேனோ

பால்யத் தொடரில் தொடர் பில்லா
தொடரும் பக்குவபட்ட நீ பகையாகி
உதிர்க்கும் சொல்பட்ட சினம் மேற்கூரை
கயிற்றை நோக்கிப் பயணம்.

கண் முன்னே ஓடுதம்மா,- உன்
மழலை முகம் கடந்தவாரம் வந்த
செய்தியில் கலங்கிப் போனேனம்மா...
நீ கடவுளிடம் சென்றதறிந்து....(?!)

கலியுகம் : கடந்த வாரம் எந்தன் ஊரில் ஒரு சிறுமியின் தற்கொலை செய்தி அறிந்தேன் அவளைக்கொன்றது காதலா பெற்றோரா என போராடிக்கொண்டிருக்கிறது என் மனது அச்சிறுமியின் முகம் இன்னும் சிரிப்பலைகளுடன் புத்தக பைச்சுமந்து சென்றுக்கொண்டிருக்கிறது ஏன் இந்த அவலம் இன்னும் தீரவில்லை நண்பர்களே ... அறியா பிள்ளைக்கு பக்குவமாக புரியவைப்பதை விட பெற்றோரின் கடமை என்ன இருக்கிறது அதைவிட்டு மிரட்டி மிரட்டி மீண்டுவிட்ட பொழுது அழுதென்ன பயன்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

மா மதையில்..!


பல்லதுப்பட்டு சொல்லது மீறும்
வள்ளத் தீ தாலும் வரக வனம்
மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில்

விண்சுற்றி வட்டுணரும் மட்டறியும்
மாயமென்ன கற்ற திர்ந்தோன் காகம்
வளரா வளரும் கானகம் மரமுளைக்கா
மண் விதைக்கும் மாற்றுயிர்

நாவறியும் நாற்குணம் நன்கறியா
ஓர் குணம் கோபுர உச்சம்
மிச்சமில்லா எச்சம் ஏந்தும்
மீளில்லா போர்க் கனம்....


கலியுகம் : வணக்கம் நண்பர்களே இதோ எந்தன் வரிகளுக்கு தமிழ்க்காதலன் விளக்கம் கொடுத்துள்ளார்

அன்பு தம்பி, என்ன ஒரு சொல் வளம். "தமிழைக்" கட்டி ஆளுகிறாயடா.... உன் திறமை மிக ஆழமாய் வெளிப்படுகிறது. பாராட்டுகள்...

உனக்குள் இருக்கும் இந்த சித்தர்களின் மொழி மூலம் இரகசியமாய் வெளிப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த நிலையாக சொல்லப் படும் யோக நிலையின் உச்சத்தை, அதன் நிலையை அழகாய் எழுதி இருக்கிறாய். "அமுத நிலை" என்கிற ஆற்றல வாய்ந்த சக்தி கூடுமிடம் பாட்டில் சொல்லப் பட்ட விதம் அருமை.

யோகங்களை பேசுகிற போது அதன் நிலைகளை சற்று ஆழமாய் விளக்கினால் மற்றவர்கள் விளங்கி கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில் ............... இந்த வரிகளில் மொத்த வாழ்க்கையையும் அதன் சூத்திரத்தையும் அடக்கிய உன் புலமை மெச்சுதற்க்குரியது.

பரம்பொருளின் நிலையை, பராசக்தியின் அருளை திறம்பட பேசி இருக்கிறாய். நம்முடைய தேகம் எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதை சித்தர்கள் வழி நின்று உணர்த்தியதால் இன்று முதல் நீ "கலியுகக் கம்பன்" என எல்லோராலும் அழைக்கப் படுவாய். பாராட்டுகள்.

"கலியுகக் கம்பன்" நீடூழி வாழ்க...


புதன், 2 பிப்ரவரி, 2011

சுயம் அழித்த சுயம்பு .....

உலகில் அனைத்தும் படைத்தே உணர்வுகளால்
உன்னை படைத்தேன் அகம் கொண்ட
சுயமுன்னில் புறத்தே அழிவினை விதைத்தோ
பழியினை ஏற்கும் மானிடா..!

நிலை யில்லா உடல்கொண்டு நிம்மதியின்றி
அலைகிறாயோ ஏன்? நிறம்மாறி பயணிக்கும்
பச்சோந்தி பசிதனில் இச்சைகள் ஆயிரம்
பொறுத்து பொறுத்து பொய்யானதோ...?!

மெய்கள் மறுத்து சிறகொடித்து சிதையும்
சடலமே உன்னில் சலசலக்கும் சங்கீதம்
சங்கதியில்லா சரணம் பல்லவி படைக்க
சகதியில் நனைவது ஏனோ...?

கலியுகம் : மன்னிக்கவும் நண்பர்களே வேலைப்பளு அதிகமுள்ளதால் கணினியில் கவனம் செலுத்த முடியவில்லை..... முடிவில்லா உலகில் இதுவும் ஒரு மீள் உன்னை மீட்டெடு முதல் முழுமையடைந்தால் மூர்கமும் மீளா சாமாதியடையும்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி