வியாழன், 8 டிசம்பர், 2022

எந்திரம் மந்திரம்


தன்னை அறிந்தவர் தானுல ராகின்
முன்னை வினையோட முந்துவ ராகின்
தின்னம் உறங்கிய தீர்த்தமெய் யாகின்
எண்ண மரு(று)(த்)ந்தது ஏத்துவச் சீராய் (1)

சிந்தை நுழைந்தெந்தன் சித்தம் கலந்தாய் 
விந்தை இதுவென்றாய் வின்னைத் தொடவே
கந்தைக் களைந்தெந்தன் கர்வம் உணர்ந்தேன் 
தந்தை தயையென்றே தங்கத் திளைத்தேன் (2)

சித்தம் வைத்தாய்ச் சிந்தைச் சிதறிட
சுத்தம் மொய்த்தேன் சூடித் திறிந்திட
மொத்தம் தைத்தாய் மூடித் திறந்திட
தத்தம் மெய்த்தேன் தாகம் பருகிடேன் (3)

நினைத்து விட்டேன் உன்னை உரிமையுடன் 
நனைத்து விட்டாய் தன்னை உடையவனே 
வினைத்து விட்டாய் பக்தி பழமெனவே 
அணைத்து கொண்டாய் அண்ணா மலையழகா (4)


அடிமுடித் தேடிட அகப்படாது அறியார்
பிடிபடக் கூட்டினில் பிழைத்தவரும் உணரார்
அடிபட ஆட்கொள அழைத்திடவே வருவார்
அடிமுடிக் கொண்டோனே அகிலமெலாம் அடியார் (5)

சனி, 16 அக்டோபர், 2021

அம்பலத்தான் ஆடவந்தான் !அம்பலத்தான் ஆடவந்தான் கண்டுகொண்டேன் அம்பலத்தே
அம்பலத்தான் ஆடலிடை மெய்மறந்தேன்
மும்மலத்தின் மூலமவன் கண்டுகொண்டேன் அம்பலத்தே
முந்திவருந் தேடலிடை உள்ளொளியாய்
சந்ததிதான் சாட்சியவன் கண்டுகொண்டேன் அம்பலத்தே
சந்தமிசைத் செந்தமிழால் அன்புருக
வந்தெதிரே ஆடிவந்தான் கண்டுகொண்டேன் அம்பலத்தே
வாழ்வளிக்கும் எம்பெருமான் என்னுயிரில்
கந்தனவன் தேடிவரக் கண்டுகொண்டேன் அம்பலத்தே
கண்ணயரக் காரியமாய்க் கட்டுண்டேன்
சொந்தமென நாடிவரங் கண்டுகொண்டான் அம்பலத்தே
சொர்க்கமினி வேண்டுவனாச் சொக்கநாதா
எண்ணமெனும் ஏட்டினையும் கண்டுகொண்டேன் அம்பலத்தே
எண்ணமற்று ஏற்றிடவே தாயுமானான்
வண்ணமாக வானுயரக் கண்டுகொண்டேன் அம்பலத்தே
வானிறங்கி ஆடவந்தான் அம்பலத்தே

வியாழன், 7 அக்டோபர், 2021

இதயத்தின் நெருக்கத்தில் !இயக்கத்தின் இருக்கத்தில் இதயத்தின் நெருக்கத்தில்
இமைமூடி இருந்தேனே இதம்காணவே
தயக்கம்தான் தடுமாற நடுக்கத்தில் தயையாக
தமிழுக்குத் தடைபோட முடியாதய்யா
முழக்கத்தின் முடிவேதோ முயல்வேனோ முடிவாக
முழுமைக்கும் இலக்காகும் முழம்போடவே
பழக்கத்தில் பசித்தோட படியெட்டப் பழகிட்டேன்
பரியேறி வருவாயோ எனைக்காணவே
இடப்பக்கம் இழைந்தாடும் பராசக்திப் பதியான
இறைவா நீ திசையெங்கும் திலைத்தாடவே
மடப்பள்ளி மழைத்தூறல் மரணத்தின் மடைச்சாரல்
மயங்கேனே உனைக்காண உயிர்வாழுறேன்
அடைகாக்கும் எனக்குள்ளே அழைத்தாயே அதிகாரம்
அணையாத சுடராக அரங்கேறிவா
எடைபோடும் மனத்திற்குள் எதற்காக இடங்கொண்டாய்
எனையாளும் திரிபுரனே திசைத்தாருமே

புதன், 6 அக்டோபர், 2021

உடுக்கை மேனியே அடிக்கட்டும் ...!

அடிமைச் சங்கிலி உடையட்டும்
அரிதா அப்பனை உணரட்டும்
ஆருயிர் அங்கமே அனர்த்தம்தான்
ஆவுடை அப்பனின் நிறுத்தம்தான்
இடியும் மின்னலும் இடர்ப்பட்டு
இனியும் உன்னிலே அகலட்டும்
ஈரடித் திக்கிலும் படரட்டும்
ஈரமே நெஞ்சினில் கசியட்டும்
உடுக்கை மேனியே அடிக்கட்டும்
உடுக்க ஓவென உருகட்டும்
ஊரினில் திங்களும் திகழட்டும்
ஊற்றிடும் பங்கெனப் பழகட்டும்
எடுத்த ஏடதை நடத்தட்டும்
எனக்குள் யாதுமாய்த் துடிக்கட்டும்
ஏட்டினில் பாடெனப் பணிக்கத்தான்
ஏழையின் கூடெனில் அடைபட்டான்
ஐயனே அப்பனே அழைத்தாயோ
ஐந்தது வானவா அணைத்தாயோ
ஒடிய ஒன்றன ஒருவட்டம்
ஒளிரும் தன்னிலே சுடரெட்டும்
ஓவெனக் கூத்தது தொடங்கட்டும்
ஓயாதுக் கூத்தனின் நடனம்தான்
ஓளவையின் அன்பெனப் பொறுத்தாடு
ஔடதம் அங்கென வழங்கட்டும்
ௐ நமசிவாய ௐ நமசிவாய ௐ நமசிவாய

செவ்வாய், 5 அக்டோபர், 2021

கந்தனவன் தேடிடட்டும் ! நாயகனும் கூடிடட்டும் !அந்தரத்தே ஆடுகின்றான் அப்பனவன் பாரெழிலை
அன்புருகத் தேடுகின்றேன் அர்ப்பணிக்க
வந்திரங்கி ஆடுமென்னில் வக்கனையாய்ச் சோறுமுண்டு
வன்னிமரத் தேகமுள்ளில் வந்தமராய்
மந்திரத்தில் மாயனென்ற மன்னவனே மாதவனே
மங்கையவள் ஈருடலாய் அர்த்தமெய்யாய்
தந்திரத்தைத் தாங்கிநிற்கும் தாணுமானத் தந்தையுமாய்த்
தாயுமானத் தான்தோன்றி வந்தருளாய்
எந்தவித மார்க்கமாக என்னுடனே ஏகமுமாய்
எண்ணற்றப் போகமெனத் தங்கிவிடேன்
கந்தனவன் தேடிடட்டும் நாயகனும் கூடிடட்டும்
கண்ணெனவே காத்திருப்பேன் காலமெலாம்
பந்தமெனப் பாடிவரும் பாசமென நாடிவரும்
பங்குமெனப் பார்வதியும் பாய்ந்துவர
எந்திரமாய் ஏற்றியுரு எண்ணுதலின் மாற்றமென
என்னுயிரில் ஏதுமிலா ஏங்கிதவி(ப்பேன்)

தென்னாடுடைய சிவனே போற்றி !பாதம் பதித்தது தென்னகமோ பரமேசுவரா
பாக்கியம் பெற்றொமே பலமேசுவரா
நாதம் ஒலித்தது தென்னகமோ பரமேசுவரா
நாட்டியம் கண்டிடோம் பதமேசுவரா
வேதம் ஒலித்தது தென்னகமோ பரமேசுவரா
வேண்டுவத் தந்திடும் பலனீசுவரா
யாதும் ஒளிர்ந்தது தென்னகமோ பரமேசுவரா
யாரொடு ஒன்றிடும் பயணீசுவரா
வாதம் வலிந்தது தென்னகமோ பரமேசுவரா
வாய்மையே வென்றிடும் பரணீசுவரா
ஓத ஒளிர்ந்தது தென்னகமோ பரமேசுவரா
ஓலை வந்தது பழமேசுவரா
பாதம் படர்ந்தது தென்னகமோ பரமேசுவரா
பாலன் வந்தது பழனீசுவரா
காதல் கடந்தது தென்னகமோ பரமேசுவரா
கானம் கண்டது பதியேசுவரா

திருநாவலூர் அப்பன் தரிசனம்

திங்கள், 4 அக்டோபர், 2021

உன்னை விட்டோடிட முடியுமோ !உன்னை விட்டோடிட முடியுமோ என்னால்
உள்ளி ருந்தாடிடும் உயர்வே
தென்ன கத்தானடி உலகையே முன்னால்
தென்ற லாய்த்தீண்டிடும் உடனாய்
எண்ணம் தொட்டாடிட நழுவுமோ தன்னால்
எண்ணி ருந்தாயுவன் முதலாய்
வண்ண மிட்டாடிய மகிமையா! சொல்லாய்
வள்ள லாய்த்தோன்றிடுந் தயவே
கண்ணி லுங்காவிய மயமதே நல்லாய்
கந்த னைத்தந்தனே பரமா
வன்னி யுங்கன்னியுங் கரும்பென மொய்க்க
வச்சி ரத்தேகமே மருந்தாய்
மன்ன வன்தேடிடுங் கணையிலே மெய்யாய்
மந்தி ரத்தாணியும் சருகாய்
ஒன்றெ னாருள்ளிலே உயர்ந்திடும் சீவன்
அர்த்த மெய்யானவா! சிவனே!

படம் : நடனபாதேசுவரர் , திருகண்டேசுவரம் , நெல்லிக்குப்பம் , கடலூர் மாவட்டம்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி