ஞாயிறு, 26 ஜூன், 2011

கவிச்சோலை கவிதைப்போட்டி



நண்பர் எல் . கே அவர்கள் கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம் சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை எழுத விடுத்த போட்டி அழைப்பை ஏற்று அடியேனின் வரிகளும் அவையில் பங்கேற்று எமக்கு பெரும் மகிழ்சியை அள்ளிக்கொடுத்துள்ளன

முத்தொள்ளாயிரம் பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

இவை அடியேனின் வரிகள்
வீரம் நிறைந்திட்ட போர்ப்படை வீழ்ச்சிகளற்று
தேர்ச்சிகள் பெற்றோன் வீழ்வதாமெதிர்
படைகளன்ரென எண்ணமது கொண்ட
வெண்குடை தாங்கிய தேர்தனைக் கண்டதும்
நிகழ்தனில் அத்தேர்தனை
தரைத்தாழவீழ்த்தி வெண்குடைதனை
பற்றிதம் கால்களால் மிதித்தழித்து
வெற்றிவீருகொண்டு பிளிறும் யானை
தன்னவனைக் காக்கும் எண்ணமத்தில்
சித்திரை முழுநிலவுக் கொண்ட
தோற்றம் கண்டு வெண்குடை தாங்கியொரு
போர்ப் படை வருவதென எண்ணி
வெண்ணிலவை வீழ்த்த வானுயர
துதிக்கையை உயர்த்தி வீருகொண்டதொரு
சேர மன்னனின் யானை ............

விளக்கம்
தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது. அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும், நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

11 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ்! நன்றாக வந்திருக்கிறது கவிதை..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தினேஷ், நீங்கள் கொடுத்த விளக்கத்தால் என்னால் கவிதையை புரிந்து கொண்டு ரசிக்க முடிநதது.நிலவை சேரனின் வெண்குடைக்கு ஒப்பிட்டவிதம் அருமை..

எல் கே சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ் . நாளை அந்த கதையை அனுப்பிவிடுகிறேன்

A.R.ராஜகோபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவரே
உங்களின் தமிழ் என்னை
வியக்க வைக்கிறது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லவேளை விளக்கம் கொடுத்தீங்க.. ஹா ஹா

உணவு உலகம் சொன்னது…

வளமான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

நிரூபன் சொன்னது…

வித்தியாசமான முறையில் கவிதையினை எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் சகோ.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே ஹே இப்போதான் நல்லா புரியுதுலேய் தம்பி.....

நிரூபன் சொன்னது…

மதிப்பிற்குரிய சகோதரன் தினேஷ்குமார் அவர்கட்கு,

நேற்றே இந்தக் கருத்துக்களைத் தங்கள் பதிவு தொடர்பாக முன் வைக்கலாம் என்று நினைத்தேன்,
ஆனாலும் நீங்கள் போட்டியொன்றிற்காக எழுதிய கவிதை எனும் காரணத்தால், முதல் நாளே இப்படி ஓர் விளக்கத்தைக் கொடுப்பது அழகல்ல என்று விலகி விட்டேன்,

இப்போது நான் சொல்லும் கருத்துக்களுக்காக முதலில் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.

கவிதையானது;
மரப்புக் கவிதை,
செய்யுள் கவிதை,
உரை நடை கலந்த கவிதை,
என மூன்று பகுப்புக்களில் தான் தமிழ் இலக்கிய உலகில் ஆரம்ப காலத்தில் இருந்தது.

பின்னர் ஹைக்கூ எனும் வடிவம் வந்து கொள்கிறது.

மேற் கூறிய மூன்று வடிவங்களும் பாமர மக்களுக்கு எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத வடிவங்களாகவும்,
படித்த பாண்டித்தியம் பெற்றோருக்கு மட்டும் புரிந்து கொள்ளவும், அவர்களால் மாத்திரம் எழுதப்படும் வடிவமாகவும் இருந்தது..

இவ் வடிவங்களை உடைப்பதற்காகத் தான் புதுக் கவிதை எனும் வடிவத்தினைக் பிற் காலக் கவிஞர்கள் கையாண்டார்கள்.

அரச சபைகளிலும், கோயில்களிலும் கடின நடையில் பாடப் பெற்ற கவிதையினை முறியடித்து,
தமது கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையானதாக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தான் புதுக் கவிதை எனும் வடிவம் தோற்றம் பெறுகின்றது.

இப் புதுக் கவிதை எனும் வடிவத்தில் புரட்சி செய்தவனாகப் பாரதி விளங்குகிறான்.

இன்னோர் விடயம், மரபு இலக்கியத்திற்கேதுவான யாப்பு முறை தெரிந்திருந்தால் தான் கவிதை எழுத முடியும் எனும் நிலமையினை மாற்றியமைக்கவும்,
தமிழ்க் கவிதையினை அனைவர் கைகளிலும் தவழ விடவும் புதுக் கவிதை பிறந்து கொள்கிறது.

எல் கே அண்ணா அவர்களின் முத்தொள்ளாயிரம் பாடலுக்கு, அவர் கேட்டிருப்பது புதுக் கவிதையினை.

ஆனால் இங்கே நீங்கள் வழங்கியிருப்பது,
இக் காலத்தில் எவராலும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாத
‘குறிப்பாக புலமை நெறியில் மாத்திரம் பாண்டித்தியம் பெற்றவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய,
சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத செய்யுள் இலக்கியத்தினையாகும்,

இது புதுக் கவிதை அல்ல.

புதுக் கவிதை எனப்படுவது,
எல்லோருக்கும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்து கொள்ளக் கூடிய ஓர் வடிவமாகும்.

இதனை எல் கே அண்ணா அவர்களும் கவனத்தில் எடுப்பார் என நினைக்கிறேன்.

நீங்களும் இதனைக் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.

தினேஷ்குமார் சொன்னது…

@நிரூபன் ...

மதிப்பிற்குரிய சகோ நிருபன் அவர்கட்கு ...

தாங்கள் கூறுவதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் ....

எல்.கே அவர்கள் புதுக்கவிதை எழுத அவருடைய கவிச்சோலையில் கடந்த மாதம் பதிவிட்டு சங்கப்பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தார் அதனைக்கொண்டு என் மனதில் உதித்த வரிகளே இப்பதிவில் காணும் வரிகள் ...

சகோ குறிப்பாக ஒன்று கவணிக்கவும் இலக்கியத்திற்கேதுவான யாப்பு முறை அறியாதவன் யான் கற்றது கடுகளவுதான் செந்தமிழை(பத்தாம் வகுப்புவரைதான்) ... யார் செய்த புண்ணியமோ எனக்கு இவ்வாறாக வரிகள் தொடுக்க வார்த்தைகள் மனச்சிறையில் இருந்து உதிர்கின்றன அவற்றை வரிகளாக வார்த்தெடுக்கிறேன் தமிழன்னையின் மீதும் செந்தமிழ் மீதும் உள்ள அளவுகடந்த பக்தியால்...

பிழையேதும் நான் இழைத்திருந்தால் என்னை மன்னித்தருள வேண்டும் சகோ சிரம் தாழ்கிறேன் ....

மேலும் சில வரிகள் சகோ தமிழ் வார்த்தைகளை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இன்றைய தமிழ்ச் சமுதாயம் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தி விடைபெறுகிறேன் ...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி