அந்தி மாலைப் பொழுது
பசு சுவைக்க புற்கட்டுகள்
சுமந்து வரும்
கன்னியரின் கொலுசு ஓசை....!
அன்னநடையுடன்....
கனித்தமிழ் பாடலுடன்...
காதலனை தேடியதுவே....!!
கடல் நீரும் நாமெனவே
கரை சேரும் காலம் வரும்
கரையாதே கண்மணியே...!
பொற்காலம் அவள் காண
கவி படி அழைத்தானோ....?!
பொய்யுரைத்து அழைத்தானோ...?!
போர்க் கோலம் அழைத்ததுவோ...?!
மெய்யான அவளழகில்...
மெய்சிலிர்த்து போனானே...!
பெய்யாத மழை தருணம்
மேற்கூரை சாட்சி சொல்ல
மெய்யிழந்து போனாளே...!!
நேற்று வரை கன்னியவள்.
தனையிழந்து நிர்கதியாய்......
வருவான் என்ற நம்பிக்கை
காற்றாக பறந்ததுவே...அவன்
காதலனோ...? கள்வனோ...?
சாதியத்தின் சூட்சமமோ...?
சிறுபாலகனாய் ஞாபகமிஙகு
கலங்கிய கண்ணுடனே
புதியதாய் பெண்ணொருத்தி
வீட்டினுள்ளே......
"அக்கா".... என்றேன்
மறுவார்த்தையில்லை அவளிடத்தே.
காலை விழித்தவுடன்
அம்மையும் அப்பனும்
புறம் செல்ல புறப்பட
வழிமறித்து நானுமென்றேன்.
"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.
அக்காளின் துணையாக
வீட்டிலே விட்டுவிட்டார்.
ஒலிபெருக்கி பாட்டிசைக்க....
அக்காளை காணவில்லை.
தோட்டத்து வாசலிலே
அழுகுரல் கேட்க....
அறியாத பருவமதில்
அதிர்ந்து போன நான்
அவள் தோள் பற்றி
தெருக்கூத்து கட்டியகாரனாய்
கேளிக்கை வசனம் பேசி
அக்காளை சிரிக்க வைத்தேன்.
எனக்காக சிரித்தாளோ...?!
எதற்காக சிரித்தாளோ...?!
அவள் சிரிப்பில்....
இரவு வரும் நேரமிங்கு.
அம்மை அப்பனும் வரவில்லையே
எத்திக்கு அலைகிறாரோ...?!
என்ன அங்கு சூழ்நிலையோ...?!
சின்னம்மா துணையுடனே
உறங்கி போன ஞாபகம்.
மூன்று நாட்கள் ஓடினவே...
முடியாமல் அவள் சிரிக்க.
ரெட்டை மாட்டு வண்டி
ஒன்று வாசலிலே வந்து நிற்க
காயப்பட்ட காதலனும்
அம்மை அப்பனுடன் வந்திறங்க....
"கண்ணா"...! எனக் கதறிவிட்டாள்
கதறிபோய் அவனும் அழ....
தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"பெண்சாதி" கரம்பிடித்து
அவரிருவர் பணிந்து விழ
புரியாத புதிரானேன் நான்.............!!
எனை வழிநடத்தும் என் தாய் தந்தைக்கு வணக்கம் அவர்கள் பாதம் சரணடைந்து சமர்பிக்கும் எனது நூறாவது பதிவு
டிஸ்கி : உண்மையான வரிகளை தொடுக்க உதவிய அன்புத் தோழர் தமிழ்க்காதலன் அவர்கட்க்கு வணக்கத்துடன் கூடிய மனமார்ந்த நன்றிகள்