செவ்வாய், 13 ஜனவரி, 2015

பச்சை சேலை கட்டி வா நீ ...!


பச்சை சேலை கட்டி வா,நீ 
வயகாட்டு சோலையம்மா 
பக்கம் வந்து சொக்கி நிற்க 
ஆகாத தலைமுறை நான் 

எட்டு கட்டி மெட்டு கட்டி 
எகத்தாளம் விட்டு வெட்டி 
காக்கூழும் அரைக்கஞ்சும் 
மல்லாட்டை துவையலுந்தா 

சொல்லச் சொல்ல நா அருந்த 
தேடிச் செல்ல பாதை இல்லா 
பரிதவிக்கும் மனசு ஆறுதல் 
யார் சொல்ல யார் வெல்ல 

பசுவுக்கும் கன்று நான் பணம் 
படைத்த எண்ணம் பளிங்கு நாட 
திண்ணம் பழக்கம் வந்த திசையை 
பழிக்கும் எந்தன் குணமே குறை 

சொல்லி மாளாது சோகம் தீராது 
சோற்றில் பிடித்தவழ கனவாகுமா 
இன்று பொழுதும் ஒருபிடிச் சோறும் 
ஏலத்தில் எடுத்த வாழையிலை 

எனக்கென்ன உனக்கென்ன 
கெட்டா தடுப்பாயா கேட்டா 
கொடுப்பாயா எல்லாம் விட்ட 
வழி வயலுந்தன் சோலையம்மா 

பச்சரிசி பொங்கலும் பசும்பாலும் 
பொங்கணும் பன்னீர் கரும்பினிக்க 
வாழ்ந்தோரை வணங்கி நிற்கும் 
வழி தவறிய தலைமுறை நான் 

திங்கள், 5 ஜனவரி, 2015

இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா...!


இனியேனும் உன்னை விடுவேனா  கண்ணா
                காத்திருந்த கரு,வரையில் காலத்தை சாய்த்து
காட்சிதனில் ஆட்சிசெயும் சாட்சி கொண்டே
               கரம்பிடித்தேன் உன்னை கடவாதே நில்லு
நேற்றுவரை நிழலுடுத்தி நீந்திவர செய்தாய்
               காற்றுவந்து காதருகே காதலென சொல்லும்
சேற்றினிலே கோலமிட்ட செய்கையுன் வேலை
              ஆற்றுவ தெண்ணி அமிழ்வதேன் செல்லாய்

கருத்துயிரே காலக் கணையே பொருத்திரு
               கயவனாகி காப்பவன் காயமெனை வாட்ட
மருத்து வனேமாயம் செய்மாயும் மெய்மாற
               திருத்துவ போலெனை தீண்டாது செல்வாயோ
மூச்செழுத்து மொத்தம் தரஏற்க நிலவாய்
               யாருன்னை அழைத்தா ரெனிந்த விரைவோ
கொடுத்தவை போதாதோ மனிதம் செழிக்க
               வாய்க்குவாய் உன்னையே குற்றம் சாட்ட

திருந்துவார் யாரோ அறிந்துவர செய்யேன்
              அருந்துவார் தன்னை அகற்றுவ பொய்யில்
இருந்துபார் எண்ணம் தகர்த்துவ மெய்யை
              இடையேறுஞ் சக்தி பெற்றாலே பாக்யம்
இனுமேனோ என்னை தவிக்கவெ விட்டு
              இனங்காணும் முன்னே தரித்ததை விட்டு
இடங்காண அர்த்தம் அலங்கரிக்க விட்டு
              இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா,,,,,,


சனி, 3 ஜனவரி, 2015

இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள்...!


கதிரவன் ஆட்சியே காலமாய் சோலை 
உதிர்க்கும் மலரெழுதும் சாட்சி கனவில் 
சதிராடும் கானல் களவுதான் போலும் 
எதிராடும் நாணல் நகை 

உறங்காத வாழ்க்கை உலவுதே தேசம் 
திறவாத கண்கள் கலவுதே நேசம் 
இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள் 
புறங்காண ஏக்கம் மழை

நிலவென தொட்டு நிலமதில் விட்டு 
உலகென சுட்டி உலவவே மொத்தம் 
சலனமும் சுத்தம் சடுகுடு சித்தம் 
கலக்கமற்ற காத்தல் சுகம் 

காவியம் ஏதடா காதலை கேளடா 
தாவிய பேதமும் தாக்கிய கோணலே 
காவியும் சேதமே சாதகம் சேர்க்குமா 
தேவியின் போதனை சொல்

சூட்சுமம் உன்னையே சூழ்ந்தது உண்மையே
சூழ்நிலை தன்னையே சார்ந்தது உண்மையே
சூழ்ச்சிகள் தன்னகம் சேர்த்தது உண்மையே
சூத்திரம் காரணம்தான் சூடும்  

வியாழன், 1 ஜனவரி, 2015

கேள்விக்குள் சாகிறேன் ....!


இனிக்கும் இரவு கடந்துவா நெருடலாய்
வாய்க்கும் அரிதனை இன்னார்க்கு இன்னதென
இட்டுவைத்தும் எட்டியே பார்க்க கிட்டாதென
கட்டிவைத்த கோலம் காண
சட்டி வைத்து சமைக்காத சங்கடந்தான்
ஆளுதோ ஏர்கலப்பை தானிழந்து கொட்டும்
கேள்விக்குள் சாகிறேன் சாத்தியமே சாகட்டும்
கூட்டமெனும் தோல்வியில் நான்
புன்னகை பூக்காத புதுஜென்மம் யாமே
புரிந்தாலும் தேக்கும் புகழாள வீழ்த்தும்
பசித்தாலும் ஏசும் புசித்தாலும் பேசும்
பலகால மில்லாத மிருகம்
வேலிக்குள் போலிகள் தாளிக்கும் வார்த்தைகள்
சூளைக்குள் வேகுதே சங்கல்பம் கோர்வையாய்
மேல்மட்ட கோணம்தான் கோளத்தின் பாதையோ
சீர்கெட்டு போனதும் நான்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

நேற்று பொருந்த நிறுத்த இயலாமல் ...!

கணித்த காரணம் கர்மம் கடவுவ
ஜனித்த காரணம் மர்மம் வினவுவ
பணித்த காரியம் தர்மம் நிலவவே
கனிந்து காலமாய் தரும்
சலனம் சரணம் சன்யாசன் சன்னதி
சங்கல்ப சாகசம் சமயோசன் நிம்மதி
சந்தர்ப்பம் சமயம் சந்திக்க தன்விதி
சாதுர்யம் சங்கடம் தீர்
என்னது ஏனது எளிதாக கண்டிரு
தன்னது தானது தெளிவாக கண்டுரு
நின்னது வீனது நிதானம் கொண்டிரு
சொன்னது சூடும் சுடர்

கசந்து கலந்தாய் களத்தில் விளைந்தாய்
அசந்த சலங்கை அளந்தபெருங் காலம்
வசந்த மலராய் வளமுடன் வாழ்வே
வசம்தான் சிலராய் பலர்
நேற்று பொருந்த நிறுத்த இயலாத
ஊற்றாய் சருக்கி சடலமாட சங்கதி
சேற்றில் முளைத்தசெந் தாமரை பூவாட
சோற்றை பிசைந்தது கரம்
நாளை நகைத்து நடனமாட தானாக
வேளை திகைத்து கடன்பட வீனாக
சோலை உடன்பட காதல் சடுகுடு
சாலை மணந்த சடலம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சோற்றை பார்க்கும் கடைசி மனிதன் - நானும்


பசிக்க சோறு
தேடியே இனி
சவமாகு - காலம்

வேறென்ன நீ
செய்வாய்
வெறுமனே - எண்ணம்

காப்பேன் கடமை
என்றான்
மீத்தேன் சதியில் - இன்று

சோதனை தானே
சோற்றை பார்க்கும்
கடைசி மனிதன் - நானும்

வேறென்ன நான் செய்ய
வேர் என்ன தான் செய்ய
பசித்தால் புசிக்க மற

இல்லையேல் இன்றேனும்
போர்த் தொழில் பழகு
போர்க்களம் நிறுவும்

அரிசிக்கு கடைசி
பாலம் நீயென்றே
காலம் வரையும்

ஆகினும் காணாதே வம்சம்
செத்துமடிவது உறுதியே அம்சம்
களமிறங்கி களையெடுத்து கொல்

அல்ல 

ஐம்பது ரூபா அரிசி
ஐநூறாகிடும் அன்றை
காண வா நின்று.....

சனி, 13 டிசம்பர், 2014

வெறுமனே....!


வெறுமனே வாழ்வை
கடந்துவிட சித்தம்
சந்தையில் சிதறிவிடா
எண்ணம் கொள்ளுதே
மொத்தம் சங்கட
சிக்கலில்

சித்திரம் பழகியும் 
சத்திரம் கொள்வதில்லை
கடுகு வெட்டுபட
காரம் குறையுமா
காரண சூரணம்
கையமர்ந்தே

கங்கை முடிசூடி
கந்தன் அப்பனாகி
நின்றெலாம் ஆள்வ
நிலை கொள்ள 
நிசம் சந்தர்ப்பம் 
வசமே

நின்றாலும் நீடு
சென்றாலும் ஏடு
வென்றாலும் பாடு
இருந்தெவரும் 
கண்டதில்லை 
அன்றில் ஒன்றும்

அறிந்தும் அடையாது
புரிந்தும் படியாது 
பாலம் தடைபட்ட
பாட்டன் கதையேது
வாட்டி நிலவுதே
இன்றும்

கொடுப்பினை 
கொண்டவர்க்கே கோளம்
எனதாக கண்டவரும்
அண்டி நிற்க 
அர்ப்பமே சித்தமா
அப்பனே 

அன்னார்க்கும் நிலை
நின்னார்க்கும் விலை
இன்னார் விரித்த
வலையில் சிக்கிய 
மீனெங்கு மீண்டும் 
நீந்த நீரற்று .....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி